ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை: வசூல் பணத்தை பஸ் நிலையத்தில் வாங்கிய பெண் சார்பதிவாளர் சிக்கினார் அதிரடி வேட்டையில் ரூ.12 லட்சம்- ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல்




புரோக்கர்களிடம் இருந்து வசூல் பணத்தை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வைத்து வாங்கிய பெண் சார்பதிவாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ரகசிய கண்காணிப்பு

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர கட்டணம் போக பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின் மதிப்பிற்கும் ஏற்பவும் கூடுதல் தொகையை லஞ்சமாக பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையிட முடிவு செய்தனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது மேற்படி அலுவலக சார்பதிவாளர் பெத்துலட்சுமி, லஞ்சப்பணத்தையும், புரோக்கர்களிடம் வசூலாகும் பணத்தையும் அலுவலகத்தில் வைத்து வாங்கினால் சிக்கிக்கொள்வோம் என்று பஸ் நிலையத்திற்கு வரவழைத்து பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

விடிய, விடிய விசாரணை

அப்போது ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்களிடம் பணத்தை பெற்று சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ்சில் ஏற முயன்றார். இதை கவனித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் அவரிடம் வசூல் பணம் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது பெத்துலட்சுமியிடம் இருந்து கணக்கில்வராத ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பரமக்குடியில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள் அதிரடியாக சென்று தீவிர சோதனை நடத்தினர்.

ரூ.12 லட்சம், ரூ.1 கோடி ஆவணம்

இந்த சோதனையின்போதும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மொத்தம் ரூ.12 லட்சத்து 800 மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெத்துலட்சுமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் சார்பதிவாளர் வீடு, அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராதபணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments