ராமேஸ்வரம் ரயில் சேவை 2024 பிப்ரவரியில் துவக்கம்




பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளை முடித்து ராமேஸ்வரத்திற்கு 2024 பிப்ரவரியில் ரயில் போக்குவரத்து துவக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது. இதையடுத்து பாம்பன் ரயில் பாலம் ரூ.525 கோடியிலும், ரூ.90 கோடியில் ராமேஸ்வரத்தில் ரயில் நிலைய கட்டடம், மற்றும் ரூ.2 கோடியில் புதிய பிட்லைன் என ரூ.617 கோடியில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இந்தியா முழுதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ரயிலில் வருகின்றனர். 2022ம் ஆண்டில் தினமும் சராசரியாக 9000 பயணிகள் ரயில் மூலம் வந்துள்ளனர்.

இச்சூழலில் பாம்பன் கடலில்உள்ள நுாற்றாண்டு கண்ட பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் அடிக்கடிரயில் போக்குவரத்து மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.525 கோடியில் புதிய பாலம் அமைக்க பிரதமர் மோடி அறிவித்ததால் புதிய பாலம் கட்டும் பணி 2020ல் துவங்கியது.

புதிய ரயில் பாலத்தில் 1.5 கி.மீ.,க்கு 77 துாண்கள் அமைத்து அவற்றின் மீது இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தி 100 சதவீதம் பணி முடிந்து ஒப்பந்த ஊழியர்கள் திரும்பி சென்று விட்டனர். மீதமுள்ள 500 மீட்டரில் 22 துாண்கள் அமைத்த நிலையில் துாக்கு பாலம் வடிவமைக்கும் பணி நடப்பதால் துாண்கள் மீது கர்டர், தண்டவாளங்கள் பொருத்தப்படாமல் உள்ளது.
நவம்பருக்குள் துாக்கு பாலம் நிறைவு:

பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி புதிய பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியை துரிதமாக முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் நவ., 20க்குள் துாக்கு பாலத்தை வடிவமைத்து பாலத்தின் நடுவில் பொருத்த உள்ளனர்.

இதன்பின் டிச.,30க்குள் மீதமுள்ள 500 மீட்டர் பாலத்தில் கர்டர், தண்டவாளம் பொருத்தி புதிய பாலப்பணிகள் நிறைவு பெற உள்ளது. ஜனவரியில் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளனர். பிப்ரவரியில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்க உள்ளார்.

ஆசியாவில் முதல் லிப்ட் துாக்கு பாலம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுவில் அமையும் துாக்கு பாலம் ஸ்பெயின் நாட்டின் தனியார் நிறுவன பொறியாளர்கள் வடிவமைப்பில் உருவாகிறது. இது 72.5 மீட்டர் நீளம், 500 டன் எடை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 22 மீட்டர் உயரம் திறந்து மூடும் திறன் கொண்டது.இந்த துாக்கு பாலம் " லிப்ட் " முறையில் திறந்து மூடும் திறன் கொண்டது.

ஆசியாவில் முதன் முறையாக இந்த லிப்ட் துாக்கு பாலம் பாம்பன் கடலில் அமைகிறது. இதுபோன்ற லிப்ட் துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் உள்ளது. இந்த பாலத்தில் காற்றின் வேகத்தை அளவிடும் "அமினோ" கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் மணிக்கு 50 கி.மீ.,க்கு மேல் காற்று வீசினால் ரயில் செல்ல தடை விதிக்கப்படும்.

ரூ.90 கோடியில் புதிய ரயில் நிலையம்

தற்போதைய ராமேஸ்வரம் ரயில் நிலைய கட்டடங்களை முழுமையாக அகற்றி ரூ.90 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இங்கு கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் இரு புதிய ரயில் நிலைய கட்டடம் அமைக்கப்படுகிறது.அதில் ஒன்று ராமேஸ்வரம் கோயில் கோபுரம்வடிவிலும், பயணிகள் வந்து செல்லும் வழியில் கோயில் பிரகாரம், துாண்கள் போல் கலை நயத்துடன் அமைக்கப்பட உள்ளது. இதில் கிழக்கு பகுதி கட்டடம் இரு தளங்களுடன் அமைகிறது. எதிர்காலத்தில் 4 தளங்கள் அமைக்க 30 அடி ஆழத்தில் கான்கிரீட் துாண்கள் அமைக்கின்றனர். இங்கிருந்து 1, 2, 3 ஆகிய நடைமேடைக்கு பயணிகள் செல்லும் வசதி உள்ளது.

லிப்ட் வசதி: கிழக்கு பகுதி கட்டடத்தில் திறந்த வெளி வணிக கடைகள் மற்றும் மாடியில் இருந்தபடி 4ம் நடைமேடை மற்றும் புதிதாக அமையும் 5ம் நடைமேடைக்கு செல்லும் வசதியும் உள்ளது.இங்கு இரு எக்ஸ்லேட்டர்கள், 4 லிப்ட் (மின் துாக்கி) வசதிகள் அமைய உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வந்து செல்லும் இரு பாதைகள் தனித்தனியாக அமைய உள்ளன.

பிட்லைன் ரெடி: இதனிடையே ராமேஸ்வரம் ரயில் நிலைய வளாகத்தில் சேதமடைந்த இரு பிட்லைனை அகற்றி ரூ.2 கோடியில் புதிய பிட்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் வரும் ரயில் பெட்டியை இங்கேயே சுத்தம்செய்து கழிப்பறை வசதிகள், குடிநீர் நிரப்புவதற்கும் தயாராக உள்ளதால் ரயில் பெட்டியை இனி மானாமதுரை கொண்டு செல்லத் தேவையில்லை.சில நாட்களாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தற்போதைய சிக்னல் பாயின்ட்டை அகற்றி 60 மீட்டர் துாரத்தில் தள்ளி வைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. மேலும் தற்போதைய 4 பிளாட் பாரத்தில் இரண்டில் கூடுதலாக 100 மீட்டர் கூரை அமைக்கப்பட உள்ளது.

2024ல் பணி முடியும்: குழுவாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருப்பு அறை, வடக்கு பகுதியில் அமையும் புதிய ரயில் நிலையத்தில் நிர்வாக அலுவலகங்கள் அமைகின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியுடன் கூடிய காப்பகங்கள், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறையுடன் கூடிய உப ரயில் நிலைய கட்டடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கு வீடுகள் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் 2024 இறுதியில் முடிந்து பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது.ஆக மொத்தத்தில் ரூ.617 கோடியில் நடக்கும் கட்டுமானத்தில் சில பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணியால் பிப்ரவரியில் துவங்கும்ரயில் போக்குவரத்துக்கு தடை இல்லை, என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments