புதுக்கோட்டையில் துணிகரம்: ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசாா் வலைவீச்சு




புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

பூட்டு உடைப்பு

புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் ஜான் கென்னடி, விவசாயி. இவரது மனைவி லில்லி (வயது 60), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர்.

இந்த நிலையில் லல்லியின் வீட்டின் பிரதான நுழைவுவாயில் இரும்பு கதவு திறந்து கிடந்தது. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் லில்லி குடும்பத்தினர் வந்துவிட்டதாக கருதி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதினர். இதையடுத்து லில்லியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

நகை-பணம் திருட்டு

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்களும் தரையில் சிதறி கிடந்தன.

பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் லாரா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டன. இதில் மோப்ப நாய் அருகே இருந்த பொட்டல் காட்டுப்பகுதிக்கு சென்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா சேதம்

இதற்கிடையில் சின்னப்பா நகரில் 2-ம் வீதியில் ஓய்வு பெற்ற மருத்துவத்துறை அதிகாரியான கார்த்திகேயன் (63) என்பவரது வீட்டில் மர்ம ஆசாமி உள்ளே நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் பூட்டை உடைக்க முடியாமல் அவர் திரும்பி சென்றார்.

இதனிடையே அவரது வீட்டில் சுவர் குதித்து திருட முயன்ற மர்ம ஆசாமியின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. கேமராவை பார்த்த அவர் அதனை சேதப்படுத்திய காட்சியும் பதிவானது. அந்த மர்ம ஆசாமி தனது முகத்தை மூடியபடியும், கைகளில் உறையும், உடல் முழுவதும் கவர் செய்யும் வகையில் ஆடையும் அணிந்திருந்தார்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments