மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயியின் வீட்டில் செய்வினை எடுப்பதாக கூறி 3 பவுன் சங்கிலி அபேஸ்
மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயியின் வீட்டில் செய்வினை எடுப்பதாக கூறி 3 பவுன் சங்கிலியை முதியவர் திருடி சென்றுள்ளார்.

செய்வினை எடுக்க வந்த முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருேக மேற்பனைக்காடு மையம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 55). விவசாயி. இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டு வாசலுக்கு வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தங்கள் வீட்டில் உங்கள் உறவினர்களால் செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனே எடுக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் உடல்நலக்குறைவு ஏற்படும். கெட்ட சம்பவங்கள் நடக்கும் என்று மகாலிங்கம் குடும்பத்தினரை பயமுறுத்தியுள்ளார். இதில் பயந்துபோன மகாலிங்கம் குடும்பத்தினர் செய்வினையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

3 நாட்கள் பூஜை

தொடர்ந்து 3 நாட்கள் வரை பூஜை செய்ய வேண்டும். இந்த வீட்டில் பூஜை நடப்பது வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று சொன்ன முதியவர் 3 நாட்கள் பூஜை செய்துள்ளார். அப்போது பூஜை செய்த தண்ணீரில் விபூதி போன்ற பொருளை போட தண்ணீர் சிவப்பாக ஓடியது. செய்வினை அதிகமாக உள்ளதால் தண்ணீர் சிவப்பாகி விட்டது என்று கூறியுள்ளார். அதே போல வீட்டில் உள்ள 7 புடவைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கச் சொல்லி பூஜை செய்தவர் ஒரு புடவைக்குள் தங்க சங்கிலியை வையுங்கள், அப்ப தான் நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் 3 பவுன் சங்கிலியை உள்ளே வைத்து கட்டி வைத்துள்ளனர். இந்த புடவை கட்டை 3 நாட்களுக்கு பிறகே அவிழ்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் முதியவர் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு பட்டுத்துணியை கொடுத்து மகாலிங்கம் இடுப்பில் கட்டச் சொன்னார். அப்போது துணி தீ பற்றி எரிந்துள்ளது. உடனே கீரமங்கலம் சிவன் கோவிலுக்கு வாங்க ஒரு பூஜை செய்யனும் நான் முன்னால் போறேன். பின்னால் வாங்க. வரும் போது தீயில் எரிந்த துணியுடன் வரவேண்டும் என்று கூறிவிட்டு முதியவர் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.

3 பவுன் சங்கிலி

முதியவர் சொன்னது போலவே கீரமங்கலம் சிவன் கோவிலுங்கு வந்த மகாலிங்கம் குடும்பத்தினர் நீண்ட நேரம் காத்திருந்தும் முதியவர் வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் 3 நாட்களுக்கு பிறகு கட்டி வைத்த புடவை கட்டை அவிழ்த்துப் பார்த்த போது 3 பவுன் சங்கிலி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கல் மட்டும் இருந்துள்ளது. 3 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால் பதறிய மகாலிங்கம் இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் சம்பவ நாட்களில் முதியவர் அந்த வழியாகச் சென்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments