மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் திடீர் பழுது விமானியின் சாதுர்யத்தால் 180 பயணிகள் உயிர் தப்பினர்




மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் சக்கரம் திடீரென பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் 180 பயணிகள் உயிர் தப்பினர்.

மலேசிய விமானம்

திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக இரவு 9.20 மணி அளவில் திருச்சி வந்து பின்னர் இரவு 10.20 மணிக்கு மீண்டு்ம் கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.

ஆனால் கடந்த 18-ந்தேதி இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு காலை 10.20 மணிக்கு தான் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது, விமானத்தை விமானி தரையிறக்குவதற்காக சக்கரங்களை வெளியே வரச்செய்யும் பொத்தானை இயக்கி உள்ளார். சக்கரம் வெளியே வந்தபோது, பின்பக்கத்தில் உள்ள இடதுபுற சக்கரத்தின் டயர் காற்று இல்லாமல் பஞ்சராகி இருந்தது.

விமானிகள் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் உஷார் அடைந்து உடனடியாக திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் தயார்நிலையில் இருந்தனர். முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினரும் தயார்படுத்தப்பட்டனர். பின்னர் விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர். விமானத்தின் சக்கரம் ஓடுபாதையை தொட்டவுடன் வேகத்தை குறைத்து, தொடர்ந்து தரையில் ஓடவிடாமல் நிறுத்தினர். பின்னர் மெதுவாக விமானத்தை இயக்கி பயணிகள் இறங்கும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதன்பின் பயணிகள் பாதுகாப்புடன் விமானத்தில் இருந்து இறங்கினர்.

விமானியின் சாதுர்யத்தால் அந்த விமானத்தில் வந்த 180 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதன்பின், அந்த விமானம் மீண்டும் கோலாம்பூர் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூர் செல்வதற்காக காத்திருந்த 176 பயணிகள் விமான நிலைய ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதில் சில பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தனர்.

மாற்று சக்கரம்

பின்னர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் மாற்று சக்கரம் வரவழைக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டது. அதன்பின் அந்த விமானம் ஒருநாள் தாமதமாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மீண்டும் 135 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments