உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி ஒப்பந்தம்: முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இப்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழா

50 நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சரியாக, காலை 10 மணிக்கு அங்குள்ள பிரமாண்ட அரங்கத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்று பேசினார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

ரூ.57,354 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விழாவுக்கு இடையே, ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ்., வின் பாஸ்ட் உள்பட 12 பெரிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.57,354 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், விழாவில் ஒரு லட்சம் கோடி (1 டிரில்லியன்) அமெரிக்க டாலர் இலக்கை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

புதிய திட்டத்துக்கு அடிக்கல்

அதனைத்தொடர்ந்து, க்வால்காம் டிசைன் சென்டர் மற்றும் பஸ்ட் சோலார் நிறுவனங்களின் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, கோத்ரேஜ் நிறுவனத்தின் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, விழாவில் ஜப்பான் நாட்டின் கோச்சி மாகாண கவர்னர் ஹமாதா செய்ஜி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் தினேஷ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால், கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா கோத்ரேஜ், டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் வேணு சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி காணொலிக்காட்சி வழியாக பேசினார்.

தமிழகம் முன்னணி

விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழகம் முன்னணியில் உள்ளது. உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது.

இந்த மாநாடு நடைபெறுகிற 2 நாட்களிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.’ என்று கூறினார்.

பியூஸ் கோயல் வாழ்த்து

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஸ் கோயல் பேசும்போது, ‘தமிழ்நாடு கலாசாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் சிறப்பு மிகுந்த மாநிலமாகும். அதிலும் காஞ்சீபுரம் பட்டுக்கு தனிச் சிறப்பு உண்டு. தமிழ்நாடு இலக்காக வைத்திருக்கும் ஒரு லட்சம் கோடி (1 டிரில்லியன்) டாலர் பொருளாதாரம் எனும் உயர்ந்த இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகிறேன்’ என்றார்.

மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அலுவலர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கம் - கண்காட்சி

தொடக்க விழா முடிவுற்றதும், 8 அரங்கங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றது. இதில், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அங்குள்ள பிரமாண்ட அரங்கத்தின் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் தொழில் பிரிவு அரங்கங்கள், சுற்றுச்சூழல் அரங்கங்கள், சர்வதேச மற்றும் ஸ்டார்ட் அப் அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அங்குள்ள 8 அரங்கங்களில் 18 தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடக்கிறது.

ரூ.5½ லட்சம் கோடி ஒப்பந்தம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.5½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், முதல் நாளான நேற்றே அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக தொழில் துறை செயலாளர் அருண் ராய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழக அரசின் இணைய தளத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டின் நிறைவு நாளான இன்றும் பல தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என்பதால், முதலீட்டின் மதிப்பு சாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments