கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 3¾ மணி நேரத்தில் உடல் உறுப்புகளை எடுத்து வரும் ‘டிரோன்' பார்வையாளர்களை கவர்ந்த தமிழக என்ஜினீயர் கண்டுபிடிப்பு
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 3¾ மணி நேரத்தில் உடல் உறுப்புகளை எடுத்து வரும் ‘டிரோன்' பார்வையாளர்களை கவர்ந்தது.

நவீன யுகம்

சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தொழில் கண்காட்சியில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் டிரோன், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் டிரோன் என பல்வேறு வகையான டிரோன்கள் இடம்பெற்றிருந்தன.

நவீன யுகத்தில் டிரோன்களின் ஆதிக்கம் அதிகமாகி இருப்பதால் கல்லூரி மாணவ, மாணவிகள் டிரோன்களின் செயல்பாடுகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்தனர்.

உடல் உறுப்புகளை எடுத்து செல்லும் டிரோன்

உடல் உறுப்புகள், அவசர மருந்துகள் போன்றவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மிக குறைவான நேரத்தில் எடுத்துச்செல்லும் வகையிலான டிரோனை ஜெர்மனியில் முதுநிலை விண்வெளி என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த 32 வயது விண்வெளி என்ஜினீயரிங் பட்டதாரியான தினேஷ் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான புதிய வகை டிரோனும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த டிரோன் மூலம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 3¾ மணி நேரத்தில் உடல் உறுப்புகளை எடுத்து செல்ல முடியும் என தினேஷ் தெரிவித்தார். இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசின் ஒரு சில விதிமுறைகள் காரணமாக இதை நிறைவேற்ற முடியாத சூழல் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அங்கீகாரம் தர வேண்டும்

இந்த டிரோன் மூலம் 7 கிலோ எடை வரையிலான பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் என்றும், 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த டிரோன் குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற டிரோன்களின் செயல்பாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும், எனவே, தனது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments