கோடியக்கரையில் காட்சி கோபுரம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை
கோடியக்கரையில் காட்சி கோபுரம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது எனவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடியக்கரை கடற்கரை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கோடியக்கரை கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை உள்ளிட்ட தினங்களில் பொதுமக்கள் அதிகம் வருகை தருவது உண்டு. கடற்கரை பகுதியாக காணப்படுவதால் சுற்றிப்பார்க்கவும் பொதுமக்கள் வருகை காணப்படும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் காட்சி கோபுரம் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் மீது ஏறிச்சென்று கடல் அழகையும், கடற்கரைைய பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதனால் காட்சி கோபுரம் காட்சியாக தான் காணப்படுகிறது.

சுற்றுலா தலம்

இந்த நிலையில் கோடியக்கரையில் சுற்றுலா தலம் போல மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடற்கரை பகுதியில் அடிப்படை வசதிகளான கழிவறை, உடைகள் மாற்றும் அறை உள்ளிட்டவற்றையும் மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து வனத்துறை மற்றும் அரசு துறை சார்பில் கோடியக்கரையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை வட்டாரத்தில் கூறுகையில், "கோடியக்கரையில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா, பொதுமக்கள் பொழுதை போக்கும் அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலம் போன்று அமைக்கவும் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து உத்தரவு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments