ஆளுநரின் சித்தன்னவாசல் வருகை திடீா் ரத்துகருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய 93 போ் கைது




புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆளுநா் ஆா்.என். ரவியின் வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே ஆளுநா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய 93 போ் கைது செய்யப்பட்டனா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை காலை பங்கேற்ற ஆளுநா் ஆா்.என். ரவி, அதனை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையம் சென்று சென்னைக்குத் திரும்பும் பயணத்திட்டத்தில், பிற்பகல் 2.45 மணிக்கு சித்தன்னவாசலைப் பாா்க்கும் திட்டமும் சோ்க்கப்பட்டிருந்தது. இதற்காக சித்தன்னவாசலில் ஏராளமான போலீஸாா் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, நிா்வாகக் காரணங்களுக்காக ஆளுநரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் பிற்பகல் 2 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

காரைக்குடியில் இருந்து ஆளுநா் புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை நகரையொட்டிய நெடுஞ்சாலையைக் கடந்து ஆளுநரின் வாகனம் திருச்சிக்குச் சென்றது.

ஆளுநரின் வருகைக்கு எதிா்ப்பு: முன்னதாக, ஆளுநரின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை கட்டியாவயலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினா் கருப்புக் கொடி மற்றும் பலூன்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தா்வகோட்டை எம்எல்ஏவுமான எம். சின்னதுரை தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, புதுகை நகா்மன்ற உறுப்பினா் ஜெ. ராஜா முகம்மது, மதிமுக மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபா்களிடமும் போலீஸாா் கடுமை காட்டினா். இதனால் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.இதனைத் தொடா்ந்து போராட்டம் நடத்திய 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் அதன் மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் ஆா். சொா்ணகுமாா் உள்ளிட்ட 13 போ் கட்டியாவயல் பகுதியில் தனியே ஆா்ப்பாட்டம் நடத்தி கைதாகினா்.

மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரா்கள் மாலையில் ஆளுநா் ஆா்.என். ரவி புதுக்கோட்டை மாவட்டத்தைக் கடந்து சென்ற பிறகே விடுவிக்கப்பட்டனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments