கடத்தல் சம்பவங்களை தடுக்க பனைக்குளம் ஆற்றங்கரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை



இலங்கைக்கு தொடரும் கடத்தல் சம்பவங்கள் எதிரொலியாக பனைக்குளம், ஆற்றங்கரை பகுதியில் கடலோர போலீசார் வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொடரும் கடத்தல் சம்பவங்கள்

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. இதனை பயன்படுத்தி சிலர் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக அவ்வப்போது இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, பீடி பண்டல், மஞ்சள், கஞ்சா, போதை பவுடர், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தி செல்வதும் தொடர்கிறது. இதேபோல் இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் படகு மூலம் தங்க கட்டிகளை கடத்தி வருகின்றனர்.

அதுபோல் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகு ஒன்றில் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு மூன்று பெரிய பார்சல்களில் கடத்தல் பொருட்களை கடத்தி கொண்டு சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் வைத்து இந்திய கடலோர காவல் படை கப்பலை கண்டதும் அந்த மூன்று பார்சல்களையும் கடத்தல்காரர்கள் கடலில் வீசி படகுடன் தப்பிவிட்டனர். கடத்தல் பொருள் அடங்கிய பார்சல்கள் கடலில் வீசப்படுவதை படகில் இருந்த கடத்தல்காரர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ராமேசுவரம் உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது.

வாகன சோதனை

இந்த நிலையில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் நேற்று ஆற்றங்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடலோர போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரை கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தாரிக் தலைமையில் கடலோர போலீசார் ஆட்டோ, சரக்கு வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

கடத்தல் பொருட்கள் ஏதேனும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றதா என்பது குறித்தும் சோதனை செய்தனர். கடத்தல் சம்பவங்களை தடுக்கவே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கடலோர போலீசார் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments