காரங்காடு சூழல் மையத்தில் படகு சவாரி செய்ய குவிந்த சுற்றுலா பயணிகள்




காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மாங்குரோவ் காடுகள்

தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மற்றும் ஆற்று நீர் ஒன்றாக கலக்கும் கழிமுக பகுதியில் 5 கி.மீ. பரப்பளவுக்கு இயற்கையின் கொடையாக மாங்குரோவ் காடுகள் உள்ளன. இது பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதனால் இங்கு வனத்துறை சார்பில் படகு சவாரி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளின் அழகை ரசிப்பதுடன், இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளின் அழகையும் ரசித்து செல்கின்றனர்.

குவியும் சுற்றுலா பயணிகள்

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து படகு சவாரி செய்கின்றனர். அதன்படி திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்து படகு சவாரி செய்தனர். ஒரு படகிற்கு சுமார் 20 நபர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் கடலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

மாங்குரோவ் காடுகள், பறவைகளின் ரீங்காரத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆழம் குறைவான பகுதியில் இறங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் கண்காணிப்பு கோபுரம் மற்றும் தீவுகளை போல் உள்ள மாங்குரோவ் காடுகளையும் ரசித்தனர்.

கண்காணிப்பு கோபுரம்

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கண்காணிப்பு கோபுரம் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு பாலம் கட்டப்படாததால் பறவைகளின் அழகையும் மாங்குரோவ் காடுகளின் அழகையும் ரசித்து புகைப்படம் எடுக்க முடியவில்லை. அதேபோல் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து வனவர் திவ்யலெட்சுமி கூறும்போது, காரங்காடு சூழலியல் மையத்தில் சுற்றுலா பயணிகள் கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல அடிப்படை வசதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக செய்வதற்காகவும் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான நிதி வந்தவுடன் அப்பணிகள் நிறைவேற்றப்படும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments