அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம்




அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,349-வது சதயவிழாவையொட்டி 2-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, அறந்தாங்கி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய மாடு 6 ஜோடிகளும், நடுமாடு 9 ஜோடிகளும், கரிச்சான் மாடு 15 ஜோடிகளும் என மொத்தம் 30 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதில், பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், நடுமாடு 6 மைல் தூரமும், கரிச்சான் மாடு போய் வர 5 மைல் தூரமும் என பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு அழியாநிலை பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுக்கோட்டை சாலையில் போட்டிகள் நடைபெற்றன.

சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

இந்த போட்டியில் கலந்து கொண்ட காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற சாரதிக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்பட்டன. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அழியாநிலை முத்தரையர் சமுதாய மக்கள் செய்திருந்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பால தண்டாயுதபாணி சுவாமி கோவில்

ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் நடுமாடு 10 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு 27 ஜோடிகளும் கலந்து கொண்டன. நேற்று காலை பெரிய மாடுகளும், பூஞ்சிட்டு மாடுகளும், தேன் சிட்டு மாடுகளும் கலந்து கொண்டன. இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை பெருமருதூர் கிராம மக்களும், நேதாஜி இளைஞர் மன்றத்தினரும் செய்து இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments