பயணிகள் மூலம் வருவாய் அடிப்படையில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு 6-வது இடம் புதுக்கோட்டை 75-வது இடம் பிடித்தது




பயணிகள் மூலம் வருவாய் அடிப்படையில் திருச்சி ரெயில் நிலையம் 6-வது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை 75-வது இடத்தை பிடித்துள்ளது.

தர வரிசை

ரெயில்வேயில் ரெயில் நிலையங்களில் பயணிகள் மூலமான வருவாய் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி அறிவிக்கப்படுவது உண்டு. இதில் ரெயில் நிலையங்களின் தரம் ஏ 1, ஏ, பி, சி, டி என்ற வகையில் இருந்தது. இதனை தற்போது என்.எஸ்.ஜி. 1 முதல் 6 வரையும், 5 ஜி 2, 5 ஜி 3, எச்.ஜி. 1, எச்.ஜி. 1 பி., எச்.ஜி. 2, எச்.ஜி.3 என தர வகை மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் வருவாய் மூலம் தர வரிசை பட்டியல் வெளியானது. இதில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் இடத்திலும், சென்னை எழும்பூர் 2-வது இடத்திலும், தாம்பரம் 3-வது இடத்திலும் உள்ளது. இந்த 3 ரெயில் நிலையங்களும் என்.எஸ்.ஜி. 1 தர வரிசை வகையில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக என்.ஜி.2 தரத்தில் கோவை 4-வது இடத்திலும், மதுரை 5-வது இடத்திலும் உள்ளது.

திருச்சி 6-வது இடம்

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி ரெயில் நிலையம் என்.எஸ்.ஜி. 3 தரத்தில் 6-வது இடத்தில் உள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்து 27 லட்சத்து 43 ஆயிரத்து 772 பயணிகளும், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து 51 லட்சத்து 80 ஆயிரத்து 60 பயணிகளும் என மொத்தம் 79 லட்சத்து 23 ஆயிரத்து 822 பயணிகள் கடந்த ஓராண்டில் பயணம் செய்துள்ளனர்.இந்த பயணிகள் மூலம் ரூ.165 கோடியே 68 லட்சத்து 88 ஆயிரத்து 516 வருவாய் ஈட்டியுள்ளது. இதன்மூலம் திருச்சி ரெயில் நிலையத்தை என்.எஸ்.ஜி. 2 தரத்திற்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் திருச்சி ரெயில் நிலையத்தின் தரம் உயருகிறது.

கரூர் ரெயில் நிலையம் பயணிகள் மூலம் ரூ.18 கோடியே 14 லட்சத்து 22 ஆயிரத்து 627 வருவாய் ஈட்டி என்.எஸ்.ஜி.4 தரத்தில் 36-வது இடத்தில் உள்ளது.

புதுக்கோட்டை

இதேபோல அரியலூர் ரெயில் நிலையம் பயணிகள் மூலம் ரூ.8 கோடியே 90 லட்சத்து 90 ஆயிரத்து 860 வருவாய் ஈட்டி என்.எஸ்.ஜி. 5 தரத்தில் 66-வது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை ரெயில் நிலையம் 75-வது இடத்தில் என்.எஸ்.ஜி. 5 தர வகையில் இடம்பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு டிக்கெட் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 358 பயணிகளும், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து 2 லட்சத்து 10 ஆயிரத்து 11 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணிகள் மூலம் ரூ.5 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 312 வருவாய் ஈட்டியுள்ளது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வருவாயும் அதிகரிப்பதால் தரவரிசையில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments