புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 86 ஆயிரம் பேர் கணக்கு தொடக்கம்





புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 86 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
   பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அவர்களது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தொலைநோக்கு திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண் குழந்தைகள் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பலர் சேர்ந்துள்ளனர். இத்திட்டம் பற்றி தபால் துறை வட்டாரத்தில் கூறியதாவது:- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர், காப்பாளர் மூலம் கணக்கு தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். குறைந்த பட்சம் ரூ.250 வைப்பு தொகை செலுத்தி தொடங்கலாம்.

21 ஆண்டுகள்

கணக்கு தொடங்கப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். குறைந்தப்பட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்தலாம். ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவிலும் வட்டி கணக்கில் சேர்க்கப்படும். ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. செலுத்தும் தொகை, வட்டி முதிர்வு தொகை என அனைத்திற்கும் வருமான வரி விலக்கு உண்டு.

கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். கணக்கு முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். பெண் குழந்தைகள் மேற்படிப்பிற்காக 50 சதவீத தொகையை அவருடைய 10-ம் வகுப்பு முடிந்த பின் அல்லது 18 வயது பூர்த்தியான பின் பெற்றுக்கொள்ளலாம். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னரே கணக்கை முடிக்கலாம். திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்பும் இன்றி முடித்துக்கொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட உள்பட பிற வங்கிகளிலும் இத்திட்டத்தில் கணக்கை தொடக்கி செலுத்தலாம்.

கணக்கு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை 338 தபால் நிலையங்கள் உள்ளது. மாவட்டத்தில் தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது வரை 85 ஆயிரத்து 791 பேர் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். இத்திட்டம் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றவர்களுக்கு பாதுகாப்பாக இத்திட்டம் செயல்படுகிறது. பெண் குழந்தைகள் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள் தொடர்ந்து இத்திடத்தில் கணக்கு தொடங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments