எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அத்துமீறல்




ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகள், வலைகள் சேதப்படுத்தப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று இருந்தனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த சேசூராஜா என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் சக்திவேல் (வயது 54), அருணகிரி (54), சேகர் (66), பாலு (54) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் சிறைபிடிப்பு

இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேற்கண்ட 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரையும், இலங்கை கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் சீசன் நேற்று இரவில் இருந்துதான் தொடங்கி உள்ளது. கடைசி நாளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments