புதுக்கோட்டையில் மீன்வளத்தை பெருக்க கடலில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் பணி தீவிரம்




புதுக்கோட்டையில் மீன்வளத்தை பெருக்க கடலில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

பவளப்பாறைகள்

மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் கடலில் மீன்வளம் குறைந்து வரும் சூழல் உள்ளதால் மீனவர்களுக்கு போதிய அளவு தினசரி மீன்கள் கிடைக்கப் பெறாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே கடலில் மீன்வளத்தை அதிகரித்திடவும், வளம் குன்றா மீன்வளத்தை பாதுகாத்திடவும், கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய மாநில அரசின் பங்கு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் காலநிலை மீள்தன்மை மீனவ கிராமம் திட்டத்தின் கீழ் குமரப்பண் வயல் மீனவ கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் ரூ.47.71 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மூன்று வகை வடிவங்களில் (முக்கோண வடிவம்-120, கிணறு வட்ட வடிவம்-70 மற்றும் குழு வடிவம்-70) மொத்தம் 260 எண்ணிக்கை கொண்ட செயற்கை பவளப்பாறைகள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, அவற்றை குமரப்பணவயல் கடல் பகுதியில் நிறுவும் பணி நேற்று தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.

அதிக வருவாய்

இந்த செயற்கை பவளப்பாறைகள் மீன்கள் இனப்பெறுக்கம் செய்திடவும், மீன்குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ந்திடவும் மேலும் மீன்களுக்கு உறைவிடமாகவும் செயல்படும். இதனால் இந்த பகுதியில் மீன்வளம் மற்றும் இதர கடல் உயிரினங்கள் அதிகளவில் உற்பத்தி செய்திட வழிவகுக்கும். இதன் மூலம் வளங்குன்ற மீன்வள மேலாண்மை பல்லுயிர் பெருக்க மேலாண்மைக்கும் சிறப்பாக அமையும். மீன்வளம் அதிகரிப்பதன் மூலம் மீனவர்களுக்கு தினசரி மீன்பிடிப்புத்திறன் மற்றும் அளவு அதிகரித்து அதிக வருவாய் ஈட்டிடவும் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் பெரிதும் உறுதுணையாக இந்த செற்கை பவளப்பாறைகள் அமையும். இந்நிகழ்வில் திருச்சி மண்டல மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, புதுக்கோட்டை மாவட்ட மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, மீன் பிடித்துறைமுக திட்டக்கோட்ட உதவி செற்பொறியாளர் விக்னேஷ்வர், அரசு அலுவலர்கள் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments