காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு 6-ந்தேதி தொடக்கம்




காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 6-ந்தேதி முதல் தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வசந்தி தெரிவித்தார்.

இளநிலை பாடப்பிரிவுகள்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் வசந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) முதல் கல்லூரி உமையாள் அரங்கத்தில் தொடங்கி நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார், பாதுகாப்புப்படை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந்தேதி (தமிழ், ஆங்கிலப்பாடங்கள் தவிர, தகுதியுடைய (கட் ஆப்) மதிப்பெண் பெற்றவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ.), பி.எஸ்சி. புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 10-ந்தேதி காலை 9.30 மணிக்கு தகுதியுடைய (கட் ஆப்) மதிப்பெண் பெற்றவர்களுக்கு வணிகவியல் (பி.காம்.), தொழில் நிர்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 12-ந்தேதி காலை 9.30 மணிக்கு பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் அன்றைய தினம் தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு மொழிப்பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதல் சுற்று பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொது கலந்தாய்வு

15-ந்தேதி தமிழ், ஆங்கில பாடங்கள் தவிர 300-க்கு கீழ் தகுதிபெற்ற (கட் ஆப்) மதிப்பெண் பெற்றவர்களுக்கு காலை 9.30 மணிக்கு பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ.), பி.எஸ்சி. புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந்தேதி காலை 9.30 மணிக்கு (தமிழ், ஆங்கிலப் பாடங்கள் தவிர, 300க்கு கீழ் தகுதியுடைய (கட் ஆப்) மதிப்பெண் பெற்றவர்களுக்கு வணிகவியல் (பி.காம்.), தொழில் நிர்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும்,18-ந்தேதி காலை 9.30 மணிக்கு பி.ஏ. வரலாறு,பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், அன்றைய தினம் தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு மொழிப்பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் 2-ம் சுற்று பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது.

இணையதளத்தை...

இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் அசல் சான்றிதழ்கள் அல்லது தலைமையாசிரியர் கையொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் , முதல் பட்டதாரி சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றின் நகல்கள் 3, செல்போன் எண், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள், புகைப்படம், விண்ணப்ப படிவம் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.agacollege.in என்ற இணைய தளத்தையோ அல்லது நேரில் கல்லூரியையோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments