தமிழ்நாட்டில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளதாக தகவல்




தமிழ்நாட்டில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் தொடங்கி நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே அதிகாரப்பூர்வமானதாக இன்றளவும் இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வந்ததால், அந்த பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் 16-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026-27-ல் மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதிகாரிகள் நியமனம்

அதன்படி, சில மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி இந்த பணிகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எம்.சுந்தரேஷ்பாபு இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பல்வேறு நிலைகளில் கணக்கெடுப்பு மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டு இருக்கிறது.

ஆகஸ்டு 1-ந்தேதி முதல்...

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் பிரத்தியேக செல்போன் செயலி வாயிலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் சுய கணக்கெடுப்பு என்ற அடிப்படையில் வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இணையதளம் வாயிலாக மக்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்கும் பிரமாண்ட பணிகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

33 வகையான கேள்விகள்

முதற்கட்ட கணக்கெடுப்பின்போது, வீடு, குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட்டு அந்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் தவறான தகவல்கள் யாரும் கொடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்களுக்கு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு நிறைவு பெற்றதும், அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதத்தில் நபர்களை கணக்கிடும் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments