ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஜூலை 31-க்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!



தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா முழுவதிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
​மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்கள் W.P(MD) 16485/2015, W.P(MD)14699/2015 மற்றும் W.P.No.3075/2017 ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி (தீர்ப்பு நாள்: 18.03.2026), தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள தனி நபர் பட்டா நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை, சம்பந்தப்பட்ட பட்டாதாரர்கள் அனைவரும் எதிர்வரும் 31.07.2026-க்குள் தங்களது சொந்தப் பொறுப்பில் உடனடியாக அகற்றிட வேண்டும்.
அரசின் அதிரடி நடவடிக்கை எச்சரிக்கை
​குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (31.07.2026) பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்களின் நிலங்களில் உள்ள மரங்கள் அரசே முன்வந்து அகற்றும். அவ்வாறு அரசினால் அகற்றப்படும் பட்சத்தில், அதற்காகும் முழுச் செலவுத்தொகையும் சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களிடமிருந்தே நில வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை ஏற்று, தங்களது பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இங்ஙனம்
​வட்டாட்சியர், ஆவுடையார்கோவில்.
​வருவாய் கோட்டாட்சியர், அறந்தாங்கி.
​மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments